கோயம்புத்தூர் நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், சிற்றுளி அறக்கட்டளை, மார்ட்டின் குழுமம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெறுகிறது. இன்று (ஜூன் 29) முதல் ஜூலை 2ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, “கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிற்றுளி அறக்கட்டளை சார்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவில் கூடைபந்து போட்டி உட்பட சக்கர நாற்காலி போட்டிகள் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிகளை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை தந்தனர். நேரு ஸ்டேடியத்திற்கும் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு மின்விளக்குகள் எல்லாம் மாற்றி புதுப்பிக்கப்பட்டது.
அதேபோல் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கும் நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை நிறுத்தி செம்மொழிப் பூங்கா அமைக்க உள்ளார்கள். விளையாட்டைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டு வீரர் வீராங்கனைகள் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை வாழ்த்து சொல்ல எதுவும் இல்லை, அதற்கான வாய்ப்பும் கிடையாது. எந்த திட்டமும் வரவில்லை, கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒரு சாலை கூட போடப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் முடிவு பெறவில்லை.