கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சட்டமேதை அம்பேத்கர் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எடப்பாடியார் உத்தரவுக்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பாலங்கள், சாலைகள் போன்ற திட்டங்கள் அனைத்தும் மெதுவாக நடைபெறுகிறது. புதியதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கோவை மாவட்டத்தைப் புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் தான் நடைபெறுகிறது. இதை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
கோவையில் ஒரு லோடு மண் எடுப்பதற்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். மாநகராட்சி, தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் இருக்கிறது. கடுமையாக ஊழல் பரவி இருக்கிறது.
திமுக எல்லா இடங்களிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. கரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் மருந்தடிக்கப்பட்டது. கரோனா கட்டுப்படுத்துவது குறித்து கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இப்பொழுது அலுவல் ரீதியாக கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.