கோயம்புத்தூர்:தொண்டாமுத்தூர் தொகுதி கோவைபுதூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள் மற்றும் நீத்மோர் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அதிமுக மட்டும் தான் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல்களை அமைத்து உதவி வருகிறது. கோவைக்கு என்றைக்கும் நல்ல பல திட்டங்களை கொடுத்தது அதிமுக தான். கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் கோவைக்கு கொண்டு வரவில்லை.
ஏற்கனவே, அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் தற்போதைய தமிழ்நாடு அரசு வேகமாக முடிப்பதில்லை. அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இனிமேலாவது விடியா அரசு விழித்துக்கொண்டு மக்கள் பிரச்னைகளில் பாகுபாடு பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்.
ஒட்டுமொத்தமாக திமுகவின் மீது பெரும் அதிருப்தி உள்ளதால் எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களைப் பற்றி தெரியாத விளம்பர முதலமைச்சராக இருக்கிறார்” என தெரிவித்தார்.