கோயம்புத்தூர்:கோவை வடக்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சங்கனூரில் நேற்று (02.05.2023) நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, "தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி இரண்டு மணி நேரம் பேசியும், அது வெளியே வரவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது என கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கோவையில் நீதிமன்றத்திலேயே விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டும், நீதிமன்றத்திற்கு வந்த பெண் மீது ஆசிட் வீச்சு நடைபெற்று, அப்பெண் இறந்து விட்டார். கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகமான கனிமவளக் கடத்தல் இருந்து வருகிறது.
தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லோடு கனிம வளங்கள் கடத்தப்பட்டும், திமுக அரசு அதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் அதிகமாக லஞ்சம் பெற்று கனிமங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை" என்றார்.