கோயம்புத்தூர்:கரடிமடை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு, அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும், திமுகவினருக்கும் இடையே டாஸ்மாக்கில் ஏற்பட்ட வாக்குவாதப் பிரச்னையில் செல்வராஜ் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயிரிழந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையையும் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “கோவையில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடக்கிறது. குறிப்பாக, கோவை கரடிமடையில் அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதைக் கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக் நடத்தும் திமுகவைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வளவு தைரியமாக இந்தக் கொலையை நிகழ்த்தி உள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக காவல் துறையினரும் துணையாக உள்ளனர். கோவையில் கள்ளத்தனமாக மது விற்பனையைத் தடுக்காத காவல் துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுகவினர் போராடுவோம். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனித் தீர்மானம் கொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.