கோயம்புத்தூர்:மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 100 நாட்கள், 27 நாடுகளுக்குச் சென்று 30 ஆயிரம் கிலோமீட்டரை மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளதாக ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்திருந்தார். ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் வெற்றி பெறக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சத்குருவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "அன்புள்ள சத்குரு, மண் காப்போம் இயக்கத்தைத் தொடங்கியுள்ள ஈஷாவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மண் அழிவைத் தடுக்க நடக்கும் போரில் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது.
நீங்கள் கூறியுள்ளபடி, அதிகம் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் மண் அழிவு பிரச்சினையானது, உலகின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, நீங்கள் முன்னெடுத்துள்ள இந்த உன்னதமான பணி வெற்றி பெற உங்களுக்கும், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.