கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கனிம வளங்கள் கடத்தல் குறித்து சட்ட ஆலோசனைகள் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் அதிக அளவு கல் குவாரிகள் உள்ளது. இங்குள்ள கல்குவாரிகளில் பெரும்பாலனவை அரசு நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறி சட்ட விரோதமாக இயங்கி வருகிறது.
300 மீட்டர் தொலைவிலே வீடுகளும், மனைகளும் உள்ளன. நீரோடை மற்றும் மின்கம்பங்கள் விதிமுறைக்கு மாறாக 50 மீட்டர் இடைவெளி இல்லாமல் உள்ளது. மேலும், ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை தொட்டிகள் 500 மீட்டர் இடைவெளி இல்லாமல் உள்ளது. கல்குவாரியில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்து செல்வதால் கிராமப்புற ரோடுகள் அதிக அளவு சேதமடைந்து விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கல்குவாரிகள் இயங்குவதால் நீர்நிலைகள் குறைந்து வருகிறது. கால்நடை வளர்ப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சட்ட விரோதமாக கல்குவாரி செயல்படும் இடங்களில் அதிக வெப்பம் உள்ளதால் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், கல்குவாரி உரிமையாளர் சங்க செயலாளர் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் கனிம வளத்துறைக்கு வழங்குகிறார். குவாரிகள் ஒவ்வொன்றும் தலா மூன்று லட்சம் ரூபாய் வரை சட்டவிரோதமாக கொடுக்கின்றனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கல்குவாரி செயல்பாட்டில் இணைந்து, தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கப்பட வேண்டும்.