கோயம்புத்தூர்:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்து எங்கு பார்த்தாலும் அதிகரித்து வருகிறது. தற்போது அவசர நிலையில் சாலையைக் கடக்க முயற்சி செய்து உயிரிழப்போர் எண்ணிக்கை விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையிலுள்ள நகரப்பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்ல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையைக் கடந்து வருகின்றனர்.
எனவே, சாலை விபத்தைத் தடுக்கும் நோக்கிலும், பாதசாரிகளுக்கு உதவும் வகையிலும் இன்னர் வீல் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களே பயன்படுத்தும் வகையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டு, அதன் துவக்க விழா இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
இதில் கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் மதிவானன் பங்கேற்று சிக்னல் செயல்பாட்டை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அதிகளவில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதி என்பதால், இங்கு ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டதாகவும், இந்த சிக்னல் முழுக்க முழுக்க பொதுமக்களே உபயோகிக்கலாம் என்றும் கூறினார்.
120 விநாடிகள் இடைவெளியில் பொதுமக்கள் சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்தி பச்சை விளக்கை எரிய வைத்து சாலையைக் கடக்கலாம் என்றும்; இதேபோல் மாநகரில் அதிக அளவில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதிகளில் இதுபோன்ற ஸ்மார்ட் சிக்னல்கள் அமைக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.