கோவை: பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குளக்கரையில் சில நாள்கள் முன்பே திறக்கப்பட்ட அலங்கார விளக்கு வெடித்து சிதறியது. அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 7 குளக்கரைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக உள்ள உக்கடம் ஸ்மார்ட் சிட்டி குளக்கரை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே மக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி ஆணையரால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பகுதியில் வேலைகள் முழுமையாக முடிவடையாமல் இருந்தன.
அந்தக் குளக்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டுப் பூங்கா, பல்வேறு வண்ண அலங்கார விளக்குகள் போன்றவை பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகள் இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகளில் ஒன்று திடீரென வெடித்து கண்ணாடி துகள்கள் சிதறின. அப்போது அதிருஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
உடைந்த விளக்கின் சிதறல்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து சில நாள்களே ஆன நிலையில், பொதுமக்கள் கூடியிருந்த நேரத்தில் குளக்கரையில் இருந்த அலங்கார விளக்கு வெடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமற்ற பொருள்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் தினம்: கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பெண்களின் நம்பிக்கை கதை!