கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு இன்று (அக் 23) காலை கார் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பி செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையிலிருந்து தடய அறிவியல் குழுவினர் கோவைக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கோவை மற்றும் மாநில கமாண்டோ குழுவைச் சேர்ந்த பாம்ப் ஸ்குவாட் குழுக்களும் ஆய்வு செய்து வருகின்றனர். மோப்ப நாய் மூலமும் ஆய்வு செய்யப்படுகிறது. காரில் 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. அதில் ஒன்று வெடித்துள்ளது. எங்கிருந்து இவை வாங்கப்பட்டன என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான வாகனம் மாருதி கார் என தெரிய வந்துள்ளது.