கோவை சிங்காநல்லூர் பகுதியில் பல வருடங்களாக செயல்பட்டுவரும் உழவர் சந்தையில் போதிய வசதியில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக கோவையில் பெய்துவரும் தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சேறும் சகதியும் குவிந்த வண்ணம் உள்ளன.
உழவர் சந்தை வியாபாரிகள் திடீர் போராட்டம்! - Singanallur_farmers_protest
கோவை: உழவர் சந்தையை தூய்மை செய்ய வலியுறுத்தி உழவர் சந்தை வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சுகாதாரமான முறையில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் மக்களும் காய்கறிகளை வாங்க அதிகமாக வருவதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சேறும், சகதியுமாய் காட்சியளிக்கும் உழவர் சந்தையை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய வலியுறுத்தி உழவர் சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, 'கரோனா காலத்தில் சந்தையை சுத்தம் செய்' என்ற பதாகைகளை ஏந்தி உழவர் சந்தை முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.