கோவையில் செயல்பட்டு வரும் ஆன்லைன் செய்தி ஊடகம் கரோனா தொற்று தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் சரியாகச் சென்றடையவில்லை என திமுக எம்எல்ஏ கொடுத்த அறிக்கையைச் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது. இதுதவிர கோவை மருத்துவ மாணவர்களுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று புகாரையும் அந்த ஊடகம் செய்தியாக வெளியிட்டது.
இந்நிலையில் அந்த ஊடகம் தவறான செய்திகள் வெளியிட்டுள்ளதாகக் கூறி கோவை மாநகராட்சி உதவி ஆணையர் சுந்தர்ராஜன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அந்த ஊடகத்தின் செய்தியாளர் ஒருவரையும் புகைப்படக் கலைஞர் ஒருவரையும் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.