கோயம்புத்தூர் : பொள்ளாச்சி காந்தி சிலை அருகே பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்ட நோய் தடுப்பு உபகரணங்களை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இன்று வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச்ச சந்தித்துப் பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் 14 சோதனைச் சாவடிகள் உள்ளன. அதில், எட்டுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் உதவி ஆய்வாளர் தலைமையில் ஊர்க்காவல் படையினர் பணியிலிருந்து வருகின்றனர்.
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்கள் கேரளா அரசு அனுமதியுடன் கரோனா பரிசோதனை சான்றிதழ், முறையான இ- பாஸ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. எல்லையில் வரும் நபர்களிடம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது 3ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றித்திரிந்தது தொடர்பாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
மேலும், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள், டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செயபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.