கோயம்புத்தூர் அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கோவை வந்துள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. இருளில் மூழ்கவில்லை. நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. சிலர் செய்த பிரச்னையால் மின்தடை ஏற்பட்ட நிலையில், மாற்று நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டது. மின் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி.
தனியார்மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடு்த்து விடுவதாக சிலர் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதனால் பொதுமக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பல துணைநிலை மாநிலங்களில் மின்துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும். 24 மணி நேரமும் சிறப்பான செயல்பாடு இருக்கும். இதனால் மின் ஊழியர்கள், அலுவலர்கள் பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு சாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தி, இந்த திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது. மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான் இது.
மின்திருட்டு தடுக்கப்படுவதால் சிலர் இந்த போராட்டங்களை தூண்டி இருக்கலாம். இதனால் மின்துறை ஊழியர்கள், அலுவலர்கள் பணியிலோ அல்லது பதவி உயர்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பான முடிவுகள் முதலமைச்சருடன் பேசித்தான் எடுக்கப்படுகிறது.
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னதுகூட, பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான். இதை ஊழியர், அலுவலர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். புதுச்சேரி இப்போது நன்றாக இருக்கின்றது. புதுவை மாடல் இனி உயர்ந்த மாடலாக இருக்கப் போகிறது.