தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்: SFRBC ரத்தினசபாபதி அறிவிப்பு! - சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 8:17 PM IST

கோயம்புத்தூர்: ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி, “நீண்ட காலமாகச் சாதி வாரிக் கணக்கெடுப்பு இல்லாத காரணத்தால், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மத்திய, மாநில அரசுக் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் 40 ஆண்டுகாலமாக இட ஒதுக்கீடு இல்லை.

பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே 1992ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது. இருந்தும் இன்று வரை மத்திய அரசுப் பணிகளில், 18 விழுக்காட்டிற்கும் குறைவான அரசுப் பணியிடங்களே வழங்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் பொய்யான நிலையில், மத்திய அரசு சார்பாகச் சாதி வாரி கணக்கெடுப்பை கை விட்டு விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பீகார் மாநில அரசு சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் மாற்றுக் கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஏற்படுத்திய தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகரமாகச் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி, புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ளனர். ஒரிசா உள்படப் பல மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக நீதியை முன்னெடுத்த முதல் மாநிலமான தமிழ்நாடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்கத் தாமதம் செய்வதும், தவிர்க்க முயல்வதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கின்றது. இதனால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு ஆகியவற்றின் ஒரே கோரிக்கை, மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்குமேயானால் இந்த மாத இறுதியில் அரசியல் சார்பில்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகள் கூட்டத்தைக் கூட்டி தொடர் போராட்ட நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"2024 தேர்தல் திமுக vs பாஜக தான்" - அண்ணாமலை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details