தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை வரும் முன்னே திருடர்கள் வருவார்கள் பின்னே - தொடரும் திருட்டு - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானை வரும் முன்னே திருடர்கள் வருவார்கள் பின்னே என்ற புது பழமொழி தடாகம் பகுதியில் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தொடரும் திருட்டு சம்பவம்
தொடரும் திருட்டு சம்பவம்

By

Published : Sep 7, 2021, 7:11 AM IST

கோயம்புத்தூர்: மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. உணவு மற்றும் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சாப்பிடுவதையும், தண்ணீர் தொட்டிகளில் நீர் அருந்துவதையும் வழக்கமாக வைத்துள்ளன.

அவ்வாறு யானைகள் புகும்போது தோட்ட உரிமையாளர்கள் பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் விரட்டி வருகின்றனர். ஆனால் சில சமயம் இதற்கெல்லாம் அச்சப்படாத யானைகள் அங்குள்ளவர்களை தாக்க முற்படுகின்றன. அதுமட்டுமின்றி இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் யானைகள் ஊருக்குள் சர்வ சாதாரணமாக உலா வருவதால் அவ்வப்போது மனித மிருக மோதல் ஏற்படுகிறது.

தற்போது மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் இரவு நேரத்தில் ஆட்கள் யாரும் தங்குவதில்லை. வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கி விடுவதால் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. யானைகளின் நடமாட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன.

யானைகள் எந்த பகுதிகளுக்கு செல்கிறதோ அந்த பகுதியை குறி வைத்து செல்லும் கும்பல் அங்குள்ள மின் மோட்டார்கள், இருசக்கர வாகனங்கள் என கிடைக்கும் பொருள்களை எல்லாம் திருடிச்சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்களிடையே யானை பயம் நீங்கி திருடர்கள் பயம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் திருட்டு சம்பவம்

20 தோட்டங்களில் திருட்டு

இதுகுறித்து தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மனோகரன் கூறுகையில், "வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தோட்டங்களை சேதப்படுத்துவதால் அங்கிருந்தவர்கள் ஊருக்குள் சென்றுவிட்டனர்.

பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதன் காரணமாக திருடர்கள் யானை வருவதை பயன்படுத்தி தோட்டத்திலுள்ள காப்பர் வயர்கள் மற்றும் மின் மோட்டார்களை திருடிச் செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 20 தோட்டங்களில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார்.

தொடரும் திருட்டு சம்பவம்

ஆடுகள் திருட்டு

பாதிக்கப்பட்ட விவசாயி தாமோதரன் கூறுகையில், " யானைக்கு பயந்து தோட்டத்தில் உள்ளவர்கள் ஊருக்குள் சென்றுவிட்டதால் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னுடைய தோட்டத்திற்கு திருட வந்தவர்கள் பொருள்கள் ஏதும் கிடைக்காததால் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். குறிப்பாக விலை உயர்ந்த காப்பர் வயர்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாலும் இதனை கவனிப்பதில்லை" என்றார்.

தொடரும் திருட்டு சம்பவம்

விரைவில் நடவடிக்கை

தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து தடாகம் காவல் துறையினரிடம் கேட்டபோது, "யானைகள் வருவதை பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவம் நடைபெறுகின்றன. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.

விவசாயிகளுக்கு சோதனை

கடந்த ஒரு மாத காலமாக தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களை பட்டியலிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். யானைகளால் பயிர் சேதம், திருடர்களால் பொருள் சேதம் என தொடர்ச்சியாக சோதனைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பதிப்பகம் தொடங்கிய திரௌபதி இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details