கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு முதலிடத்தில் இருந்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பயின்று வருகின்றனர்.
கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மருத்துவமனைகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று, இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.
முதலமைச்சர் டெல்லியில் உள்ள கழக அலுவலகம் திறப்பதற்கு சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி கட்சியினரின் நிர்வாகத்தால் கட்டப்பட்ட மருத்துவமனையை பார்வையிட்டார். அந்த கட்டமைப்பை பார்த்து தமிழ்நாட்டிலும் ஏழை, எளிய மக்கள் பயனடைய வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 708 மருத்துவ மனைகள் கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டத்திற்கு 72 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் மாநகராட்சிக்கு 64 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 708 மருத்துவமனைகளில் பெரும்பாலான கட்டடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது.
மருத்துவத்துறை வரலாற்றில் தமிழ்நாட்டில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை முதலமைச்சர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர, மணியகாரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 4000ஆக உயர்ந்துள்ளது.