தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜக தாக்குதல்; திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகச் சீமான் குற்றச்சாட்டு - naam thamilar katchi

Seeman Condemns BJP: கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்
கோவையில் நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 6:13 PM IST

கோயம்புத்தூர்:பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை நீலிகோணம் பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் பொங்கல் வாழ்த்து சுவரொட்டிகளை நள்ளிரவு ஒட்டி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாஜகவினர் சிலர் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று (13.01.24) இரவு நீலிகோணம் பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டச் சென்றபோது அப்பகுதியைச் சார்ந்த பாஜகவினர் சிலர், இவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளச் செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது

சாதி, மதங்களைக் கடந்து தமிழிளந் தலைமுறை பிள்ளைகள் தமிழர்களாக ஒன்றுபட்டு பெருமளவில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாததே பாஜகவினர் செய்துள்ள இக்கோழைத்தனமான கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகும். தமிழர் ஓர்மையைச் சீர்குலைத்து, மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபமடையத் துடிக்கும் பாஜகவின் இழிவான செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறைச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. இது தான் தமிழ்நாட்டில் பாஜக வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? உண்மையில் இந்துத்துவ அமைப்புகளுக்கு திமுக அரசு தரும் மறைமுக ஆதரவே மாற்றுக் கட்சியினரைத் தாக்கும் அளவிற்குத் தமிழ்நாட்டில் பாஜக வளர முக்கியக் காரணமாகும்.

ஆகவே, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் விரைந்து நலம்பெற விழைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கமல் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட புகழ், குரேஷி - முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details