கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அருகே உள்ள தனியார் பள்ளியில் 100 விழுக்காடு தேர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக சுமாராக படிக்கக்கூடிய மாணவர்களை, இடைநிற்றல் செய்து மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியே அனுப்புவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ஆனைமலை தாலுக்கா காளியாபுரத்தில் இயங்கும் கே.எம்.ஜி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த செயலை செய்து வருகிறது.
இந்த பள்ளியில் படிக்கும் ஹரி கிருஷ்ணன் என்கின்ற மாணவனை படிப்பு வரவில்லை என்றால் செத்துப் போயிரு என்று மிரட்டியதால் கடந்த டிசம்பர் மாதம் லைசால் என்ற வேதிப் பொருளை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த சமயத்தில் பள்ளி நிர்வாகம் மருத்துவமனைக்குச் சென்று சமாதானம் பேசி வழக்கு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது. மீண்டும் அந்த மாணவன் பள்ளிக்கு திரும்பியதும் ஒருமாத காலம் அமைதியாக இருந்த பள்ளி நிர்வாகம் மீண்டும் தனது செயல்களை காண்பிக்க ஆரம்பித்து விட்டது.
பெற்றோரை அழைத்து உங்கள் பையன் முன்பு நல்லா படித்தான், இப்பொழுது படிப்பதில்லை அதனால் நீங்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இல்லை என் பையன் இதே பள்ளியில் நல்லவிதமாக படித்துக் கொள்வான் என்று சொன்ன போது, உடனடியாக அவனை நீங்கள் அழைத்துச் செல்லவேண்டும் என்று பெற்றோரிடம் மிரட்டியதால் அவர்களும் மாற்றுச் சான்றிதழை வாங்கி வந்து விட்டனர்.
பத்தாம் வகுப்பு படிக்க கூடிய அந்த மாணவன் கால் பரீட்சை அரைப் பரிட்சை எழுதி ஹால் டிக்கெட் வந்த பின்பும் அவனது மார்க் லிஸ்ட் அனுப்பாமல் குளறுபடி செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வந்த பின்பும் இந்த மாணவருக்கு மார்க் லிஸ்ட் கொடுக்காமல் உள்ளனர். இந்நிலையில், இந்த பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.