கோவை: உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்வது மற்றும் மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு சாக்கடை மற்றும் மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாக்கடையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. ரயில் நிலையம் வழியே சென்ற பொதுமக்களில் ஒருவர், "ஏன் சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தம் செய்கிறீர்கள், யார் உங்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்தியது" என கேள்வி எழுப்புவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
அப்போது சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் இருந்த தொழிலாளி "கவுன்சிலர் மற்றும் ஏ.இ சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய சொன்னார்கள்" என தெரிவித்துள்ளார். இதனை அந்த நபர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.