சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் கடந்த 9ஆம் தேதி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட செல்வன், இளமதி தம்பதியினர் கடத்தப்பட்டனர். இருவரில் இளமதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், செல்வன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
திருமணம் நடந்த அன்றிரவே திருமணத் தம்பதிகள் இருவரையும் கடத்திய கும்பலிடம் இருந்து, செல்வன் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடத்தப்பட்ட இளமதியை உடனடியாக கண்டுபிடித்து தரக் கோரியும், கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், தந்தை பெரியார் திராவிடர் கழகம், அனைத்து அமைப்புகளின் சார்பாக, கோவை மாவட்ட மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா விடம் மனு அளிக்கப்பட்டது.
சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியர் கடத்தல் தொடர்பாக ஐஜியிடம் புகார். இதுகுறித்து தி.வி.க உறுப்பினர் நேருதாஸ் கூறியதாவது:
கடந்த 9 ஆம் தேதி சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உறுப்பினர்கள் தலைமையில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாளன்று இரவே 50 பேர் கொண்ட கும்பல் புதுமண தம்பதியைக் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர், செல்வன், அவரது நண்பர்கள் மீட்கப்பட்டு அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திருமணப் பெண் குறித்து எந்தவித தகவல்களும் இல்லை. தம்பதியர் கடத்தலில் பாமக மாவட்ட கவுன்சிலர் வேலுசாமி, அமைச்சர் கருப்பன்ணன், டிஎஸ்பி சௌந்தரராஜன் ஆகியோருக்கு சம்பந்தம் இருப்பதாக அறிகிறோம்.
இதுதொடர்பாக தகுந்த விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதோடு, கடத்தலில் குற்றம்சாட்டப்படும் டி.எஸ்.பி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாதி மறுப்புத் திருணம் செய்த தம்பதிகளை கடத்தி தாக்குதல்!