தமிழ்நாட்டு கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக ட்விட்டரில் வலியுறுத்திவருகிறார். இந்த முன்னெடுப்பை வரவேற்கும்விதமாக #FreeTNTemples #கோயில்அடிமைநிறுத்து ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு துறை பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், பிரபல பெண் தொழில் அதிபரும் பையோகான் நிறுவனத்தின் தலைவருமான கிரண் மசூம்தார், முன்னாள் சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஐபிஎஸ், நடிகைகள் கங்கனா ரனாவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி (கே.ஜி.எஃப். பட நடிகை), ரவீனா டன்டன், மெளனி ராய், திரெளபதி பட இயக்குநர் மோகன், பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் ஆதரவு அளித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி தனது பதிவில், “நான் ஆன்மிக யாத்திரைகளுக்குச் சென்றுவருகிறேன். நம் புனித தலங்களில் நடக்கும் இதயமற்றச் சுரண்டல்களைப் பார்த்து என் இதயம் ரத்தம் சிந்துகிறது. மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போல் நம் கோயில்களும் விடுதலை பெற வேண்டும். சத்குரு இதற்கு குரல் கொடுத்துள்ளார். நம் நம்பிக்கைகளை மீட்க நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் சேவாக், “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறும், மிகுந்த முக்கியத்துவமும் கொண்ட நம் கோயில்களின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. இது சரிசெய்யப்படுவதோடு, முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி அனைத்து இடங்களிலும் உள்ள கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க இதுவே சரியான தருணம். இந்தத் தேவையான முன்னெடுப்பில் சத்குருவுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதிவ்யா, “இது மதம் பற்றிய விஷயம் அல்ல. இது சமூகத்தின் ஒரு தரப்பினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதி, அவமரியாதை மற்றும் சமநிலையற்றத் தன்மை பற்றிய விஷயம். முதலில் தமிழ்நாட்டில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால் பின்னர், நாடு முழுவதற்கும் மாற்றம் உருவாக்கிவிடலாம்” எனக் கூறியுள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத், “இது இதயத்தை நொறுங்கச் செய்கிறது. நம் நாகரிகத்திற்கு நாம் என்ன செய்துவைத்திருக்கிறோம். நம் நாட்டிற்காகவும், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்காகவும் எழுந்து நிற்காமல் இருப்பது அவமானமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.