கோவை: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காட்டூர் காவல் துறையினர் நேற்று (மே 20) காலை ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது 18 வயது இளம் பெண் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் காவலர்கள் விசாரணை நடத்தியதில் அந்த இளம்பெண் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் என்பதும், சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் அந்த மாணவி குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர் அந்த மாணவியை கண்டித்ததாகவும், எனவே கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காட்டூர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோருக்கும், திருவெற்றியூர் போலீசாருக்கும் தகவல் அளித்து, அவர்களிடம் அந்த இளம்பெண்ணை ஒப்படைத்தனர்.
இதேபோன்று சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போலீசார் நேற்று முன்தினம் (மே 19) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது மூன்று சிறுமிகள் அங்கு நின்றுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமிகள் 3 பேரும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மூவரும் ஒரே பள்ளியில் ஒன்றாக 7ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
தேர்வில் மதிப்பெண் குறைந்தது குறித்து பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் அங்கிருந்து பேருந்தில் கோவை வந்து எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து, நேற்று அவர்களிடம் சிறுமிகளை போலீசார் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: இதுதான் பச்சையாப்பாசின் ரியல் மாஸ்..!- பதக்கம் பெற்ற மாணவன்