சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதுடன், விதவைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படிப்பதற்கு கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை பள்ளிக்கல்வித் துறை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.
அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி (LKG) முதல் எட்டாம் வகுப்பு வரை வருகிற 2026ஆம் ஆண்டு வரைக்கும் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2020-2021ம் கல்வியாண்டில் LKG, UKG மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 12,458 ரூபாய், 2ஆம் வகுப்புக்கு 12,499 ரூபாய், 3ஆம் வகுப்புக்கு 12,578 ரூபாய், 4ஆம் வகுப்புக்கு 12,584 ரூபாய், 5ஆம் வகுப்புக்கு 12,831 ரூபாய், 6ஆம் வகுப்புக்கு 17077ரூபாய், 7ஆம் வகுப்புக்கு 17,106 ரூபாய், 8ஆம் வகுப்புக்கு 17027 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஏற்கனவே உள்ள கட்டண விகிதத்தைக் காட்டிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சற்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022 - 2023 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களில் LKG, UKG வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6,000, 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12,076, 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.15,711 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2023 முதல் 2026 வரையில் 3 கல்வி ஆண்டிற்கான எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.6,000, 1 முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ரூ.12,659, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.16,477 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்விக்கட்டணம், தனியார் பள்ளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் வழங்கும்போது தங்களால் தொடர்ந்து கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்படும் எனவும், கூடுதலாக தேவைப்படும் கட்டணத்தை பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் கருதுகின்றனர்.
இது குறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் கூறும்போது, “கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்காக, அரசு வழங்கும் கல்விக் கட்டணத்தை அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாதியாக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டு உள்ளது.