கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சின்னகுட்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். சின்னகுட்டி தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதனை 15 சதவீதம் கமிஷன் வைத்து 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று பிரகாஷிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனா(38), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன்(52), அழகர்சாமி(45), சௌமியன்(29), கருவேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவாஸ்கர்(26) மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி(43) என்கின்ற சின்னகுட்டி ஆகிய ஆறு பேரும் காரமடையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பிரகாஷை சந்தித்து கமிஷன் தொடர்பாக பேசி உள்ளனர்.
மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி அதற்கு இணையான 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பி அம்பராம்பாளையம் அருகே ஒரு கோடியே 27 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் பிரகாஷ். அப்போது மூன்று கார்களில் வந்த மோசடி கும்பல் பிரகாஷிடம் 500 ரூபாய் கட்டுகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளது.
அதனை நம்பிய பிரகாஷ் அவர்களிடம் கொண்டு வந்த பனத்தை காட்டியுள்ளார். இதனை அடுத்து பிரகாஷிடம் இருந்து ரூபாய் ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 20,000 மதிப்புள்ள பணம் என்னும் இயந்திரத்தையும் எடுத்துக்கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.