கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடுவூர் பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இது தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் உயிரிழந்தோரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், '' நேற்று முன்தினம் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 18 செ.மீ. மழை பெய்ததால், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமான மதில் சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். 17 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுவர் இடிந்து விழுந்த பகுதியைப் பார்வையிடும் முதலமைச்சர் பேரிடர் நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாயும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும். இதன்மூலம், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். மேலும் இறந்தவர் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். பல வீடுகள் ஓட்டு வீடுகளாக இருப்பதால், குடிசை மாற்று வாரியம் மூலம் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும்.
பவானி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் 300 வீடுகளுக்கு மாற்றாக, புதிய வீடுகள் வழங்கப்படும். தமிழ்நாட்டை குடிசையில்லாத மாநிலமாக உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இடிந்து விழுந்த சுவர் தீண்டாமை சுவரா என்பதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும்'' என்றார்.
இதையும் படிங்க: ‘17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல் மனதைக் கரைக்கவில்லை’ - ஸ்டாலின் காட்டம்!