தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினரால் சுடப்பட்ட சஞ்சய் ராஜா குறித்த தெளிவில்லாத நகல் ...கடுப்பான நீதிபதிகள்..! - prison

காவல்துறையினரால் சுடப்பட்ட சஞ்சய் ராஜாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தெளிவில்லாத ஆவணத்தை தாக்கல் செய்த காவல் ஆய்வாளரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையின் அதிருப்தி நகல் ...கடுப்பான நீதிபதிகள்...
காவல் துறையின் அதிருப்தி நகல் ...கடுப்பான நீதிபதிகள்...

By

Published : Mar 27, 2023, 10:13 PM IST

சென்னை: மதுரையைச் சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் சரணடைந்த கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்ற போது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய் ராஜாவின் காலில் குண்டடிப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்தவும், உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடக்கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இதனை நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரித்த போது, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கொலை வழக்கில் சரணடைந்தவரை சிறையில் அடைத்துள்ளதால் சட்டவிரோத காவலில் இருப்பதாக கருத முடியாது என்றும், ஆட்கொணர்வு மனுவில் சிகிச்சை மற்றும் விசாரணை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், காலில் குண்டடிப்பட்ட நிலையில் கோவையில் அனுமதிக்கபட்டவரை கடலூர் சிறைக்கு மாற்றியதாகவும், அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், வாழ்வா சாவா என்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், ஒருவர் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவர் இந்த நாட்டின் குடிமகன் இல்லையா என்றும், அவர் சிகிச்சை பெற உரிமையில்லையா என்றும் கேள்வி எழுப்பி, சிகிச்சை குறித்த விவரங்கள் பதில் மனுவில் விளக்கம் அளிக்காதது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்தனர்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ரேஸ் கோர்ஸ் காவல் ஆய்வாளர், சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்த விவரங்கள் எனக்கூறி, படிப்பதற்கு தெளிவில்லாத இரண்டு பக்க நகலை நீதிபதிகளிடம் வழங்கினார். அந்த நகலை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இதுபோன்ற நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

அதனடிப்படையில் இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், சஞ்சய் ராஜாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முறையான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர். பின்னர், கடலூர் சிறையில் உள்ள சஞ்சய் ராஜாவை அவரது தரப்பு வழக்கறிஞர் நாளை சென்று சந்திக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (மார்ச் 29) தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி பாஜக நிர்வாகியை கொலை செய்த 7 இளைஞர்கள் திருச்சி நீதிமன்றத்தில் சரண்

ABOUT THE AUTHOR

...view details