கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். பட்டதாரி இளைஞரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேடப்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருந்து, உணவு போன்றவற்றைக் கொண்டு சென்று கொடுப்பதற்கு ’ரோபாட்டிக்’ என்ற சிறிய ரக ரோபோவை இவர் கண்டுபிடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை தற்போது இவர் வடிவமைத்துள்ளார். இது குறித்து கார்த்திக் கூறுகையில், 'ஆய்வகங்களில் கரோனா பரிசோதனையின்போது சளி மாதிரிகளை சேகரிக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மனித ஆற்றலுக்கு மாற்றாக, இந்த ரோபோட்டிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் செயலியின் மூலம் இணையம் வாயிலாக இந்த ரோபோவை கட்டுப்படுத்தும்போது துரிதமாக இரண்டு நிமிடங்களில் பரிசோதனை செய்ய முடியும். சளி மாதிரிகளை மனிதர்களே சேகரிக்கும்போது நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தத் தானியங்கி இயந்திரம் மூலம் சளி மாதிரிகள் எடுப்பவர்கள் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.