அன்னூர்:கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர், சுப்பிரமணியன். இவர் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். கடந்த 13-ம் தேதி குடும்பத்தினருடன் சுப்பிரமணியன் தோட்டத்திற்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் பணம், நகை கொள்ளை போனது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த மார்ச் 13-ம் தேதி மாலை சுப்பிரமணியனின் மகன்கள் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பு சந்தேகத்துக்கிடமான வகையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர். இதற்கிடையே, சுப்பிரமணியனின் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த மற்றொரு நபர், இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த நபருடன் தப்பினார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2.50 லட்சம், 3 சவரன் தங்க நகைகள், லேப்டாப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சுப்பிரமணியன் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 5) காலை அன்னூர் - சத்தியமங்கலம் சாலையில் பசூர் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில், அவரது பெயர் முபாரக் அலி என்பதும், கூட்டாளி சுபாஷூடன் இணைந்து சுப்பிரமணியனின் வீட்டில் கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார்.
மேலும், இதே போன்று கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முபாரக் அலி மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளதும், தனியாக உள்ள வீடுகளை குறிவைத்து பகல் நேரங்களில் மட்டுமே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முபாரக் அலியை கைது செய்து அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் கோவையில் பதுங்கி இருந்த முபாரக் அலியின் கூட்டாளி சுபாஷ், வேறொரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டம்