கோவை செல்வபுரம் பகுதி சோழன் நகரில் தனியாருக்குச் சொந்தமான அரவை ஆலை இயங்கி வருகிறது. இந்த அரவை ஆலையில் சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி மாவாக அரைத்து விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில், செல்வபுரம் பகுதிக்குச் சென்ற மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், தனி வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆலையில் 510 கிலோ ரேஷன் அரிசி, 210 கிலோ அரிசி மாவு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரேஷன் அரிசி, கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக செயல்பட்ட ஆலைக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.