ரசாயன உணவுகளின் அபாயத்தை இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சாதாரண மக்களிடம் ஆர்கானிக் எனப்படும் இயற்கை முறை விவசாய பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் சென்று சேரவில்லை என்றே சொல்லாம். யூரியா, அமோனியா, பாஸ்பேட், பொட்டாஸ் போன்ற நச்சுகள் நாம் நாள்தோறும் உண்ணும் உணவில் கண்ணுக்கு தெரியாமல் உள்ளன. இதுபோன்ற ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்து பெறப்படும் உணவுப் பொருட்கள் நஞ்சுத்தன்மை கொண்டவை ஆகும். இதனை உண்பதால் பலவிதமான நோய்களுக்கு நாம் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். ரசாயன உரங்கள் ஏதும் உபயோகிக்காமல், இயற்கை முறையில் மாட்டுச்சாணம், கோமியம், காய்ந்த இலை தளைகள், என இவைகளை பயன்படுத்தி வேளாண்மை செய்து பெறப்படும் உணவுப் பொருள்கள் குறைந்த அளவே கிடைக்கின்றன.
இந்த சூழலில் கோவையில் தங்களுடைய உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நோயை தரக்கூடாது என எண்ணி உணவக உரிமையாளர் ஒருவர் உணவகத்திற்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து, அதை கொண்டு உணவு தயாரித்து வருகிறார். கோவை காளம்பாளையத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ரங்கராஜ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சிறுவாணி சாலையில் ஸ்ரீ வெற்றி விநாயகா மெஸ் என்ற பெயரில் வீட்டு முறை சமையல் உணவகத்தை கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறார்.
அவர் தனது உணவகம் முன்பு உள்ள நிலத்தில் வெண்டைக்காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, கீரை வகைகள், கறிவேப்பிலை, எலுமிச்சை என அனைத்தையும் இயற்கை முறையில் விவசாயம் செய்து, நாள்தோறும் பறிக்கும் காய்கறிகளை கொண்டு மதிய உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். இதுகுறித்து ரங்கராஜ் கூறுகையில், ”நான் கிரைண்டர் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற நிலையில், அங்கு வேலை குறைவாக இருந்ததால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராமமூர்த்திக்கு சொந்தமான இடத்தின் அருகே சிற்றுண்டி கடையை தொடங்கினேன். வாடிக்கையாளர் அதிகரித்ததால் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிறிய அளவில் மதிய உணவு கடை நடத்தி வந்தேன். உணவின் தரம் சுவை நன்றாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.