மத்திய அரசு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்திய ஒன்றியத்திலுள்ள சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளா, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் பஞ்சாப், ராஜஸ்தான் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் கோலம் வரைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.