தமிழ்நாடு

tamil nadu

கோவையில் தீப்பற்றி எரிந்த கார்: மேயரின் மீது வழுக்கும் சந்தேகம் - பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 10:09 PM IST

கோவை மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது புகார் அளித்திருந்த சரண்யா என்பவரின் கார் மர்மமான முறையில் இன்று (செப்.12) தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த கார்
மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த கார்

மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த கார்

கோயம்புத்தூர்:கோவை மணியக்காரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், எதிர் வீட்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைப்பதற்காக, மேயர் கல்பனா குடும்பத்தினர் சரண்யா மற்றும் அவரது குடும்பத்திற்கு தொல்லை கொடுப்பதாக காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், மேயர் கல்பனா தனது வீட்டின் முன்பு குப்பை போன்ற அழுகிய நிலையிலுள்ள துர்நாற்றம் வீசும் பொருட்களை அருகில் போடுவதாகவும், மேலும் வீட்டின் முன்பு சிறுநீரை ஊற்றுவது போன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கோவை மாவட்ட மேயரின் எதிர் வீட்டில் வசித்து வரும் சரண்யா தெரிவித்திருந்தார்.

மேலும், வீட்டின் முன்பு மந்திரித்த எலுமிச்சைப் பழங்களை வைத்து தன்னையும் தனது குடும்பத்தாரையும் மேயர் கல்பனா அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சில நாட்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்திருந்தார்.

இதையும் படிங்க:பெங்களூரில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு.. என்ன காரணம்? போலீசார் தீவிர விசாரணை!

இந்த நிலையில், இன்று (செப்.12) பிற்பகலில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சரண்யாவின் கார் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள், காரில் பற்றிய தீயை அணைத்தனர். தீப்பிடித்து எரிந்ததில் காரின் ஒரு பகுதி தீயில் சேதம் அடைந்தது. இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் இது குறித்து காவல்துறையில் சரண்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து சரண்யாவிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், மர்மமான முறையில் கார் தீ பிடித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மீது கவர் போடப்பட்டிருந்த நிலையில், கவரில் பற்றிய தீ காரின் ஒரு பகுதியை சேதமாக்கி இருப்பது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா அல்லது எதேட்சையாக நடந்ததா என்ற பல்வேறு கோணங்களில் துடியலூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்; கூர்மையான ஆயுதங்களால் தாக்கும் வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details