தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை அருகே 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு! - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்

கோயம்புத்தூர்: நாய்குட்டியைக் காப்பாற்ற முயன்று 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்ட தீயணைப்புத் துறையினர்.
கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்ட தீயணைப்புத் துறையினர்.

By

Published : May 21, 2021, 6:57 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேசன், வனிதா தம்பதியினர். இவர்களது மகன் கோகுல் (11). தனது வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டியுடன் சிறுவன் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று (மே.20) மதியம் நாய்க்குட்டியுடன் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நாய்க்குட்டி அருகே உள்ள 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. அதனை காப்பாற்ற முயன்ற சிறுவனும் அலறியபடியே கிணற்றினுள் தவறி விழுந்தான்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்கப்பட்ட காட்சி.

இதனையடுத்து அலறல் சத்தம் வந்த பகுதிக்குச் சென்ற சிறுவனின் குடும்பத்தினர், சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அன்னூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வ மோகன் தலைமையிலான குழுவினர், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுவனை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் தொடர் சிகிச்சைக்காக சிறுவன் அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினரின் செயலை, அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க : ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்த 'மக்களின் மருத்துவர்' காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details