தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை சாதிய கொடுமை சம்பவம் - இன்று மாலை அறிக்கை சமர்ப்பிப்பு

கோவை சாதிய கொடுமை சம்பவம் தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை வழங்கப்படும் என வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

லீலா அலெக்ஸ் பேட்டி
லீலா அலெக்ஸ் பேட்டி

By

Published : Aug 7, 2021, 6:30 PM IST

கோயம்புத்தூர்: கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் சொத்து விவரங்களுக்கான சரிபார்ப்புக்காக ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியாக இல்லை என கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியுள்ளார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை கோபால்சாமி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இடையில் குறுக்கிட்ட கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, அரசு அலுவலரிடம் கையை நீட்டி பேசவேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியை சாதிப்பெயரை கூறி தகாத வார்த்தைகளால் கோபால்சாமி திட்டியுள்ளார். மேலும், தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால், பொய் குற்றச்சாட்டு கூறி வேலையைவிட்டு நீக்கி விடுவதாகவும் கோபால்சாமி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கண்ணீர்விட்டு அழுதபடி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

இச்சம்பவத்தை கண்டித்து அன்னூர் பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ்க்கிற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அன்னூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரடியாக இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், "விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தற்போது எதுவும் சொல்ல முடியாது" என கூறி கிளம்பி சென்றார்.

இதன் பின்னர் பிற்பகலில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையானது இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.

லீலா அலெக்ஸ் பேட்டி

விசாரணைக்கு பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், "காலில் விழுந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். இருதரப்பினரிடமும் விசாரணை நிறைவடைந்து உள்ளது. இச்சம்பவம் நடந்த போது கோபால்சாமியுடன் இருந்த ஹரி என்ற நபரிடம் மட்டும் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரச்சொல்லி இருக்கின்றோம். அவரிடமும் விசாரணை நடத்திவிட்டு மாலை 6 மணிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்படும்" என தெரிவித்தார்.

இதன் அறிக்கை கிடைத்த பின்னர் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கோவை சாதிய கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details