கோயம்புத்தூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகர காவல்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்தங்களை அறிவித்துள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பொது மக்கள் புதிய ஆடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்கும் பொருட்டு கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர்.
இவ்வாறு வரும் பொது மக்கள் தங்கள் வாகனங்களை ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் ரோடு பகுதிகளுக்குள் வந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் வாகன நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு கோவை மாநகராட்சியால் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில், வாகனங்களை நிறுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 1.பாலக்காடு ரோடு பொள்ளாச்சி ரோடுகளிலிருந்து ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோரின் வாகனங்களும் மற்றும் திருச்சி ரோட்டிலிருந்து ஒப்பணக்கார வீதி செல்லும் வாகனங்கள் சுங்கம் வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் சென்று, உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு கீழ் உள்ள காலி இடத்தில் கோவை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதிகளுக்கு நடந்து செல்ல வேண்டும்.
2.பேரூர் ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோரின் வாகனங்கள் ராஜவீதி மற்றும் பெரிய கடைவீதி சந்திப்பு அருகில் உள்ள மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தில் கட்டணம் செலுத்தி தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும்.