கோயம்புத்தூர்: 01.01.2023-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத்தொகுதிகளிலும் 09.11.2022 முதல் 08.12.2022 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்பேரில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலானது வெளியிடப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டார். இந்நிகழ்வில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 14,98,721 பேரும், பெண் வாக்காளர்கள் 15,51,421 பேரும், இதரர் 558 பேரும் என மொத்தம் 30,50,700 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18,426 இளம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மேட்டுப்பாளையம் - 2,99,304, சூலூர் - 3,18,364, கவுண்டம்பாளையம் - 4,57,408, கோவை வடக்கு - 33,1062, தொண்டாமுத்தூர் - 3,26,895, கோவை தெற்கு - 2,43,819, சிங்காநல்லூர் - 3,23,962, கிணத்துக்கடவு - 3,29,186, பொள்ளாச்சி - 2,23,316, வால்பாறை - 1,97,384.
மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான தொடர் திருத்தப் பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இணையதளம் மூலமாகவும் மனுக்கள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.nvsp.in என்னும் இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது Voter Helpline App எனும் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ பொதுமக்கள் அவர்களது விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!