தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆனைக்கட்டி யானை உயிரிழப்பிற்கு நாட்டு வெடி காரணம் அல்ல' - மாவட்ட வன அலுவலர் - anaikatti elephant death

கோவை: ஆனைக்கட்டி பகுதியில் வாயில் காயத்துடன் உயிரிழந்த யானை, மற்ற யானைகளுடன் நடைபெற்ற சண்டை (அ) விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்திருக்கலாம் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

elephant
elephant

By

Published : Jun 22, 2020, 8:54 PM IST

கோவை, ஆனைக்கட்டி பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, வாயில் காயம் ஏற்பட்டு உணவு உண்ண முடியாமல் தவித்து வந்தது. தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மருத்துவக்குழுவினருடன் இணைந்து வலி நிவாரண மருந்துகளை பழங்களில் வைத்து அளித்தனர்.

இவர்கள் அளித்த தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு, ஜூன் 20ஆம் தேதி மாலை யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

ஆனால், திடீரென்று ஜூன் 21ஆம் தேதி, காலை 9 மணியளவில் மீண்டும் யானை சோர்வடைந்து கீழே படுத்தது. அதன்பின்னர், அங்குவந்த மருத்துவக் குழுவினர் குளுக்கோஸ் சத்து நிறைந்த மருந்துகள் அடங்கிய 30 பாட்டில்கள், வலி நிவாரணிகளான சத்து மருந்துகள் ஆகியவற்றை ஊசிகள் மூலம் யானைக்குச் செலுத்தியுள்ளனர். ஆனாலும், யானையின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போனது. இச்சூழலில் நேற்று இரவு(ஜூன் 21) யானை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

ஆனைக்கட்டி யானை

இதையடுத்து உயிரிழந்த யானையின் உடல் இன்று (ஜூன் 22) காலை உடற்கூறாய்வுக்கு உள்படுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, வனத்துறை மருத்துவர் சுகுமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, இந்தப் பரிசோதனையை செய்தனர்.

இதில் யானையின் வாய்ப்பகுதியில் இடது பக்க மேல் தாடையில் 9 செ.மீ., ஆழத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் காரணமாக அந்தப் பகுதியில் சீழ் பிடித்து யானை உணவு உட்கொள்ளாமல் உயிரிழந்தது கண்டறிப்பட்டது.

ஆனைக்கட்டி யானை உயிரிழப்பிற்கு என்ன காரணம்?

இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ' இரண்டு யானைகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு அல்லது சண்டையின் போது இந்தக் காயம் ஏற்பட்டு இருக்கலாம். 9 சென்டி மீட்டர் ஆழத்திற்கு காயம் இருந்ததால், யானை உணவு உட்கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இந்நிலையில்தான் அதனைக் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது. இந்த உயிரிழப்புக்கு நாட்டு வெடி காரணம் அல்ல, வாயிலிருந்த காயத்தினால்தான் யானை உயிரிழந்துள்ளது' என்றார்.

இதையும் படிங்க:ஆனைகட்டியில் வாயில் காயத்துடன் தவித்துவந்த யானை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details