குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோவையில் உக்கடம், ஆத்துபாலம் போன்ற பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், “இந்தப் புதிய சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இதனை எதிர்த்து பல போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் உக்கடம், ஆத்துப்பாலம் போன்ற பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான எங்களின் போராட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. இது மக்களின் உணர்வுகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் நடத்தப்படும் போராட்டம். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் அதை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது மிகவும் கவலையளிக்கிறது. அமைதியாக நடக்கும் போராட்டம், காவல் துறையினரின் அடக்குமுறையால் வன்முறையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுகிறது.