ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது புகார் கோயம்புத்தூர்:ஆளுநர் மாளிகை மீது கருக்கா வினோத் என்ற நபர் இரு தினங்களுக்கு முன் பெட்ரோல் குண்டை வீசினார். இதனையடுத்து, சென்னை மாநகர காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து, அவரிடமிருந்த பெட்ரோல் குண்டுகளைப் பறிமுதல் செய்து கருக்கா வினோத்தை புழல் சிறையில் அடைத்தனர்.
பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கும்பலாக வந்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில், ஆளுநர் மாளிகை சேதம் அடைந்ததாகவும் ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியானது. இதனை மறுத்த, சென்னை காவல்துறையினர் கருக்கா வினோத் தனிநபராக வந்ததை ஆதாரங்களுடன் வெளியிட்டனர்.
இந்நிலையில் முன்னுக்குப் பின் முரணாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் செய்தி வெளியிடுவதாகக் கூறியும் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் இந்த புகார் மனு வழங்கப்பட்டது.
இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகம் அளித்துள்ள மனுவில், "ஆளுநர் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் முன் பின் முரணாகப் பொய்யான செய்தி வெளியிட்டு அதன் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையில் பொதுமக்கள் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் தேதி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக நிகழ்விடத்திலேயே கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகளில், முதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாகவும் மற்றும் குற்றவாளிகள் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்பு, மீண்டும் ஒருவர் மட்டும் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் வீசியதாகவும், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அவசரமாக நீதிமன்ற காவலுக்குக் கொண்டு சென்றதாகச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் ஒரே ஒரு நபர் மட்டுமே எதிர்புறம் இருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி அது ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் தடுப்பில் பட்டு கீழே விழுகிறது. அந்த நபர் உள்ளே செல்ல முயலவில்லை. அதற்குள்ளாகத் தமிழ்நாடு அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். உண்மை சம்பவத்தை மறைத்து ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் இதுபோன்று முன் பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டு அதன் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் அமைதிக்கு ஊர் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கப்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஆனைமலை காப்பகத்தில் புலிக்குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி - வனத்துறையினர் ஆய்வுக் கூட்டத்தின் முடிவு என்ன?