கோவையில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக மழை பெய்துவருவதால் குறிச்சி குளம், உக்கடம் குளம், புட்டுவிக்கி பாலம், ஆகிய பகுதிகளிலுள்ள நீர்நிலைகளின் கொள்ளளவு வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதேசமயம் கோவையின் பல்வேறு இடங்களில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் மழைநீர், நீர்நிலைகளுக்கு செல்லாமல் சாலையிலேயே தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் அவினாசி மேம்பாலம், ஜி.சி.டி, காந்திபார்க் ஆகிய பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து தேங்கிவுள்ளதால் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை பெய்யும் முன்பே சாக்கடைகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரித்திருந்தால், இந்நிலை ஏற்படாமல் இருந்திருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மழைநீர் தேங்கியதினால் கொசுக்கள், பூச்சிகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.