கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மாதம் 25ஆம் தேதிமுதல் நாட்டின் அனைத்துச் சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் சுங்கச்சாவடிகள் வழக்கம்போல் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து இன்றுமுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 48-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில் 26 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.
அந்தந்தச் சுங்கச்சாவடிகளுக்கு ஏற்றவாறு 5 முதல் 12 விழுக்காடுவரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. இதில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் செப்டம்பர், ஏப்ரல் மாதங்களில் தனித்தனியாகக் கட்டணம் உயர்த்தப்பட்டுவருகிறது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழில்கள் முடங்கியுள்ளதால் சுங்கக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், சுங்கச்சாவடியில் வழக்கத்தைவிட அதிகளவில் கட்டணம் வசூலிப்பது வாகன ஓட்டிகளை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசிய பொருள்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது சுங்கச் சாவடிகளில் பழைய கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அத்தியாவசிய பொருள்களின் விலையும், விவசாய பொருள்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து வெளியே வர பல மாதங்கள் ஆகும் நிலையில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதே பலதரப்பினரின் வலியுறுத்தலாக இருக்கிறது.
இதையும் பார்க்க: ராணுவத்தை களமிறக்குங்கள் : உச்ச நீதிமன்றத்தில் மனு