கோயம்புத்தூர்: சரவணம்பட்டி பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், பணியாளர்கள் என 46 பேருக்கு நேற்று (செப்.15) கரோனா தொற்று கண்டறிப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் அக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே தொற்று பரவும் வகையில் இயங்கியதாக அக்கல்லூரிக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சமீரன் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் (Departmental Stores / Super Markets) தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் (Malls), திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.