கோயம்புத்தூர் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020" மென்பொருள் உருவாக்கும் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரி இந்த நிகழ்வை நான்காவது முறையாக நடத்துகிறது.
இன்று (ஆகஸ்ட் 1) முதல் வருகிற 3ஆம் தேதி வரை தொடர்ந்து 36 மணி நேரம் இடைவிடாது இந்த மென்பொருள் உருவாக்கும் இறுதிப் போட்டிகள், கோவிட் 19 காரணமாக முற்றிலும் இணையம் வழியாகவே நடத்தப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலைந்துரையாடினார்.
மாணவர்கள் தங்களது குழுக்களின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் குறித்து பிரதமரிடம் விளக்கினர். கோவையில், இரு மாணவ போட்டியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். முதலில் முதுகலை (Msc Software system) மாணவி ஸ்வேதா பிரதமரிடம் பேசினார்.
அப்போது, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், எவ்வாறு பராமரிப்பது குறித்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் இணைந்து மென்பொருள் தயார் செய்திருப்பது பற்றி பேசினர். இதில் மாணவி கூறியதைக் கேட்டு இந்த முயற்சி பயனுள்ளதாக உள்ளது என மோடி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இளங்கலை (Bsc computer science) மாணவர் குந்தன் என்பவர் பேசினார். குற்றங்களை பதிவு செய்ய தற்போது நேரடியாக சென்று கணினி மூலம் பதிவிடும் முறை நடைமுறையில் உள்ளது. காவல் நிலையம் செல்லாமலே புகாரளிக்கும் சேட்பாட் முறையை 6 பேர் உருவாக்கியுள்ளோம். இந்த சாட்பாட் அருகிலுள்ள காவல் நிலையத்தை காண்பிக்கும் வகையிலும், சாட்பாட் மூலமாகவும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் பயமின்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைக் கேட்ட பிரதமர் மோடி , இந்த டிவைஸ் வேறு மொழிகளிலும் வடிவமைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு தேவையான தரவுகள் கொண்டு மேம்படுத்தலாம் என அந்த மாணவர் தெரிவித்ததற்கு மோடி பாராட்டினார். அதேபோன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க:5 மாதங்களுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கியுள்ள பெரியாறு நீர் மின்நிலையம்!