கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும், அப்பெண் தற்போது ஏழு மாதம் கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.
இதனிடையே, தர்மராஜ் அப்பகுதியிலேயே கடந்த ஒரு வருடமாக மர அரவை ஆலையை நடத்திவந்துள்ளார். இந்நிலையில், இன்று வங்கி வேலையாக அவர் வெளியில் சென்ற நிலையில், அவரது மனைவி கல்பனா மர அரவை ஆலை பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அப்பெண்ணின் சுடிதார் மர அரவை இயந்திரத்தில் சிக்கியதில், இயந்திரத்தால் இழுத்துச் செல்லப்பட்டு அப்பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக சூலூர் காவல் துறையினருக்கும், தர்மராஜுக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.