கோவை: அதிமுக தொடர் வெற்றி பெறும் தொகுதியாக இருப்பதால் கோவையை புறக்கணிப்பதாகவும், கோவை மாவட்ட ஆட்சியர் இல்லாமல் கண் துடைப்புக்காக வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்ததாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான ரூ.500 ஆயிரம் கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.31) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் ஜெயராமன், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ச்சுனன், சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இல்லாத கூட்டம்; கண் துடைப்பு:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், 'மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மனவேதனை அளிக்கிறது எனவும், அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனவும், பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை என்றார். மேலும், கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இது இருந்தது' எனவும் விமர்சித்தார்.
அதிமுக வெற்றி பெற்ற கோவை தொகுதியை, புறக்கணிக்கும் திமுக அரசு: கோவை மாவட்டம் தொடர்ந்து புறகணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது ஒன்று எனவும் சாடினார். மேலும், அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும், மீண்டும் அதிமுக வெற்றி பெரும் என்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை என்றார். அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.500 ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளனர் என தெரிவித்தார். மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே உதாரணமாக உள்ளது எனவும் 'அத்திகடவு குடிநீர் திட்டம்' இன்னும் நிறைவேற்றபடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஆளுநர் குறித்த கேள்வி எழுப்பியது நன்றி வணக்கம்' என பதில் அளித்து சென்றார்.
ஜனநாயகத்தை பற்றி பேச யோகியதை கிடையாது:பின்னர் பேசிய பேசிய பி.ஆர்.நடராஜன் எம்பி, 'கூட்டத்தில் எம்மாதிரியான திட்டங்கள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தும், அதிமுக எம்எல்ஏக்களையும் அதிக அளவில் இருப்பதால் கோவை புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடம் அதிமுக ஆட்சியில் நான் எம்பியாக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி ஒரு அரசு விழாவுக்கும் என்னை அழைக்கவில்லை என குற்றம்சாட்டினார். ஜனநாயகத்தை பற்றி பேச இவர்களுக்கு யோகியதையே கிடையாது என சாடிய அவர், அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை எந்த அரசு விழா அழைப்பிதழிலும் எனது பெயரைப் போடவில்லை என மேலும் குற்றம்சாட்டினார்.