கோயம்புத்தூர்: 2017ஆம் ஆண்டு சிறு, குறு நிறுவனங்களில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சக்தி பெறப்பட்டால், ஒன்றிய அரசின் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசைத்தறிக் கூடங்களில் அமைக்கப்படும் சோலார் பேனல்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள சோமனூர், கருமத்தம்பட்டி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறிக் கூடங்களில், சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு விசைத்தறிக் கூடங்கள் இயக்கப்பட்டன.
மானியம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு வந்துசேரா 50 விழுக்காடு மானியத்தொகை
இருப்பினும் இதுவரை அரசு ஒப்புதலுடன் முறையாக அமைக்கப்பட்ட சோலார் பேனல்களுக்கான மானியம் பல ஆண்டுகளாகியும் தரப்படவில்லை என, விசைத்தறி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து விசைத்தறி உரிமையாளர் சங்கப் பொருளாளர் பூபதி பேசுகையில், “2014ஆம் ஆண்டுமுதல் அதிக மின்வெட்டு, மின் கட்டண குறைப்பு ஆகிய காரணங்களை உள்ளடக்கியே சோலார் பேனலுக்கு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து காரணம்பேட்டை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஆறு லட்சம் ரூபாய் செலவில், ஐந்து கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் பேனல் அமைத்தேன். இதற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், ஐந்து ஆண்டுகள் ஆகியும் மானியம் வந்து சேர்ந்தபாடில்லை.
நெட் மீட்டர் பொருத்த அனுமதி?
நிலுவையில் இருக்கும் மானியத் தொகையை உடனடியாக வழங்கினால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான விசைத்தறிக் கூடங்களை சோலார் வசதியில் இயங்கும் நிலையை உருவாக்க முடியும். இதன் மூலம் மின்சாரம் மிச்சமாவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படாது.
அதிக மின் கட்டணத் தொகை செலுத்துவதில் இருந்தும், விசைத்தறியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். தொடர்ந்து விசைத்தறி கூடங்களுக்கு நெட் மீட்டர் பொருத்த மாநில அரசின் சார்பில் அரசு அனுமதி வழங்குவதுடன், சோலார் பேனல் அமைக்க மானியமும் வழங்க வேண்டும்” என்றார்.
ஏற்கனவே கரோனா காரணமாக ஏற்பட்ட சுணக்கத்தால் பல விசைத்தறி உரிமையாளர்கள் மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் மானியத் தொகையை விரைந்து வழங்கி விசைத்தறி உரிமையாளர்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வருங்கால மருத்துவர்களை அவமானப்படுத்தும் ஒன்றிய அரசு - சசி தரூர்