கோவை:ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபைக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'கோவையில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.