கோவையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஷேக் சபியுல்லா, ஷாஜகான் ஆகியோருக்கு அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர்களின் வீடுகளில் போத்தனூர் காவல் துறையினர் சோதனை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை அடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திவரும் ஜிகாத் காட்சிகளின் வீடியோ கிலாபத் சித்ரா ஆகியவை பற்றிய Pdf கோப்புகள் தமிழாக்கம் செய்து வருவதாகவு குறிப்பிட்டுள்ளனர். மேலும், கோவை மாநகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தைக் காட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகளுக்கு எதிரானவர்களை கொலை செய்து மத ரீதியான பதற்றத்தை உருவாக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த தனி அறிக்கையின் மீது வழக்குப்பதிவு செய்த போத்தனூர் காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் முகமது உசேன், ஷேக் சபியுல்லா, ஷாஜகான் ஆகியோரை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.