கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை விளை நிலைங்களை சேதப்படுத்தி வருகிறது.
குடியிருப்புப் பகுதிக்குள் சர்வசாதாரணமாக உலா வரும், இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் 'பாகுபலி' எனப் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தும் பணி தீவிரம்:
இந்நிலையில் இந்த யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தி, அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக 'டாப்ஸ்லிப்' யானைகள் வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து, கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் நேற்று முன்தினம் (ஜூன் 27) முழுவதும் வனத்துறையினருக்கு போக்குக் காட்டிய 'பாகுபலி' யானை, இரவுவரை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
பின்னர் நேற்று காலை 6 மணி முதல் யானைக்கு மயக்க ஊசி செலுத்த 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பல்வேறு இடங்களில் தயார் நிலையில் இருந்தனர். அப்போது யானைக்கு செலுத்தப்பட்ட மயக்க ஊசி குறி தவறியது.
இதனையடுத்து கல்லாறு வனப்பகுதிக்குள் காலை முதல் மாலை வரை சுற்றித் திரிந்த யானை, வேடர் காலனி வனப்பகுதிக்குள் சென்றது.
சோர்வாகத் திரியும் பாகுபலி யானை
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக வனத்துறையினர் பின் தொடர்ந்ததால், 'பாகுபலி' யானை சரியாக உணவு ஏதும் உட்கொள்ளவில்லை. இதனால் யானை சோர்வடையும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அதன் பயத்தைப் போக்கும் வகையில் தற்காலிகமாக 10 நாட்களுக்கு காலர் ஐடி பொருத்தும் பணியை நிறுத்தி வைப்பதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இரண்டு குட்டிகளை ஈன்ற ‘பாராசிங்கா’ மான்!